×

பழநி அருகே புதுமையான கட்டுமான அமைப்புடன் 1000 ஆண்டு பழமையான தடுப்பணை கண்டுபிடிப்பு

*பாறாங்கற்கள், நீளமான செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது

பழநி : பழநி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான தடுப்பணையை கல்லூரி மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பொருந்தல் பகுதியில் பழநியாண்டவர் மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவிகள் நேற்று களஆய்வு மேற்கொண்டனர். துறை தலைவர் ஜெயந்திமாலா தலைமையில், தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி வழிகாட்டுதலில் நடந்த கள ஆய்வில் வரலாற்றுத்துறை மாணவிகள் ஒரு சிதைந்து போன தடுப்பணையை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: சுருளி ஆறு சண்முகா நதியின் ஒரு கிளை ஆறு. இதை சுள்ளியாறு என்று இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலையில் பொருந்தல் ஆற்றுக்கு மேற்கு பகுதியில் உற்பத்தியாகி ஒரு காட்டாறாக சில கிமீ தூரம் வடக்கு நோக்கி பச்சையாற்றில் கலக்கும் வகையில் ஓடுகிறது. இடையில் சுருளி ஆறு சுண்டக்காய்தட்டி கரட்டுக்கு கிழக்கே பாய்ந்து வருகிறது.

இந்த இடத்தில்தான் ஆற்றின் போக்கை மட்டுப்படுத்தி மாற்றும் விதமாக ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஆற்றின் கிழக்கு கரையில் சுமார் 2 கிமீ தூரம் அணை கட்டப்பட்டிருந்ததை சிதைந்து போன இடிபாடுகளில் இருந்து அறிய முடிகிறது. தற்போது தடுப்பணை வெறும் 50 மீட்டர் தூரமே காணப்படுகிறது. இதை தடுப்பணை என்று சொல்வதை விட தடுப்புக்கரை என்று சொல்வதே பொருத்தமானது.

இந்த தடுப்பணை செதுக்கி வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய பாறாங்கற்களை கொண்டும், செங்கற்களை கொண்டும் கட்டப்பட்டுள்ளது. செங்கற்கள் 23:12:5 என்ற அளவுகளில் 1:2.4: 4.74 என்ற விகிதத்தில் இருக்கின்றன. இந்த அளவு கொண்ட செங்கற்கள் இப்பகுதியில் 10ம் நூற்றாண்டு கட்டுமானங்களில் இடம் பெற்றுள்ளன. எனவே இந்த தடுப்பணை கிபி 10ம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்டிருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.

அணையின் மேல்புறம் காரை பூச்சு உள்ளது. பூச்சு விலகாமல் இருக்கவும், கரையின் மேல்புற பிடிமானத்துக்காகவும் இரும்பை காய்ச்சி ஊற்றிய தடயம் தென்படுகிறது. இது ஒரு புதுமையான கட்டுமான வகை எனலாம். சிதைந்து உருக்குலைந்து போன இந்த அணையின் மூலம் இப்பகுதியில் வசித்த தமிழ் மக்களின் பண்டைய வேளாண்மை, பாசன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள முடிகிறது.

The post பழநி அருகே புதுமையான கட்டுமான அமைப்புடன் 1000 ஆண்டு பழமையான தடுப்பணை கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : year old barrage ,Palani ,Palaniyandavar Women's College ,Palani, Dindigul district ,-year- ,Dinakaran ,
× RELATED வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்க தீவிர ரோந்து: வனத்துறை நடவடிக்கை